முதல் மனைவி இறந்த விரக்தியில் இருந்த 43 வயதான நபர் ஒருவர், தனது மகள் வயதுடைய 15 வயது சிறுமியை, கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் வலசத்துறையில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் வசித்து வரும் 43 வயதான கிருஷ்ணன் என்பவர், அந்த பகுதியில் தள்ளு வண்டி கடையில் வாழைப் பழ வியாபாரம் செய்து வருகிறார். 

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இவரது மனைவி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக அவர் தனிமையிலேயே வாழ்ந்து வந்தார்.

இப்படியே, இவருடைய வாழ்க்கை தனிமையில் சென்றுகொண்டிருந்த நிலையில், தனது வீட்டருகே வசித்து வரும் 15 வயது சிறுமியிடம், 43 வயதான கிருஷ்ணன், பழகி வந்தார். ஆனால், நாளடைவில், அந்த 15 வயது சிறுமி மீது இந்த 43 வயதான கிருஷ்ணனுக்கு ஆசை வந்து உள்ளது.

இதன் காரணமாக, சிறுமியிடம் அவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறமி, எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய 43 வயதான கிருஷ்ணன், கடந்த 27 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று பழனிக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த இடைப்பட்ட நேரத்தில், சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் மகளை காண வில்லை என்று, புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள லட்சுமி புரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகே இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதனையடுத்து 15 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த குற்றத்திற்காக, 43 வயதான கிருஷணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இதன் காரணமாக, அந்த சிறுமியின் எதிர்காலம் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, முதல் மனைவி இறந்த விரக்தியில் இருந்த 43 வயதான நபர் ஒருவர், தனது மகள் வயதுடைய 15 வயது சிறுமியை, கட்டாயத் திருமணம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல், பொள்ளாச்சி அருகே பழமையைப் போற்றும் விதமாக, மாட்டு வண்டியில் மணமக்கள் பயணித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. கோயிலிலிருந்து மணமகள் இல்லத்திற்குப் புறப்பட்ட போது,  கார்கள் அணிவகுத்து நின்ற போதிலும், பழமையைப் போற்றும் விதமாக இருவரும் மாட்டு வண்டியில் பயணித்தது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.