அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ஆனந்த் ஷங்கர். 2016-ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த இருமுகன் படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா எனும் படத்தை இயக்கினார். தற்போது விஷால் மற்றும் ஆர்யா வைத்து புதிய படத்தை உருவாக்கவுள்ளார். விஷால் 30 மற்றும் ஆர்யா 32 ஆன இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இணைந்தார் புரட்சி தளபதி விஷால். விஷாலின் வீடியோவை வெளியிட்டது படக்குழு. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். 

படத்தின் ஓப்பனிங் சாங்கின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தனர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிகை மிருணாளினி ரவி இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மிருணாளினி ரசிகர்கள். 

டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். சிறுது நேரம் வந்தாலும், ஏலியன் ரோலில் தோன்றி அசத்தினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படத்திலும் நடித்தார். மிருணாளினி ரவி கைவசம் கோப்ரா மற்றும் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் உள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் படத்தில் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.