இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், ``பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனைடைய முடியாது. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன்கருதி தவிர்க்க வேண்டும்" என்றார். சர்தார் வல்லபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதைபோல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

``புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்"

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதைபோல டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

 சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகை கங்கணா ரணாவத், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பலவீனமான மனம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.  அவர் கூறும்போது, "படேலுக்கு மிகவும் உரிய, தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்தியப் பிரதமர் என்கிற பதவியை, காந்தியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றே தியாகம் செய்தார். காரணம் நேரு நன்றாக ஆங்கிலம் பேசுவதாக காந்தி நினைத்தார். இதனால் படேலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், தேசம் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டது. எந்தவித வெட்கமுமின்றி நமக்கு உரியதை நாம் மீண்டும் பறித்துக் கொள்ள வேண்டும்.

அவர் (படேல்) தான் இந்தியாவின் உண்மையான இரும்பு மனிதர். நேரு போன்ற பலவீனமான மனம் கொண்டவரை முன்னால் வைத்துக்கொண்டு தான் பின்னால் இந்த தேசத்தை ஆளலாம் என்று காந்திஜி விரும்பியதாக நான் நம்புகிறேன். அது நல்ல திட்டம்தான். ஆனால், காந்தி கொல்லப்பட்ட பிறகு நிலைமை மிக மோசமானது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைய அகண்ட பாரதத்தை எங்களுக்குத் தந்தவர் நீங்கள். ஆனால், உங்கள் பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததன் மூலம் சிறந்த தலைமை மற்றும் பார்வையை எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உங்கள் முடிவுக்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.