தமிழக அரசியலில், சினிமாவின் பங்கலப்பு காலங்காலமாகப் பிரிக்க முடியாத பந்தமாகவே தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசியலில் பிரபலமான முகங்களாக சினிமாத்துறையில் இருந்து வந்தவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். சாமானியனாக இருந்து வருபவரைக் காட்டிலும், சினிமாவில் இருந்து வரும் நபரையே தமிழக மக்கள் பெரும்பாலும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதற்குக் காரணம், சினிமாவில் இருந்து வருபவர்களை நமது சாமானிய மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு பார்வையே காரணமாக அமைந்து போகிறது.

இப்படியாக, முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகச் சிறந்த ஆளுமைகள் எல்லாம் தமிழ் சினிமா வளர்த்தெடுத்த கலைஞர்கள் தான். பிற்காலத்தில் இந்த கலைஞர்கள் தான், தமிழக அரசியல் வரலாறு படைத்துவிட்டு, தங்களது நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதில், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் கதை ஆசிரியர்களாகவும், வசனகர்த்தாவாகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள்.

முக்கியமாக அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரின் வசனங்களை உச்சரித்தே மக்கள் திலகம் எம்ஜிஆர், தமிழ் சினிமாவில் மிகப் பெரும் ஆளுமையாக ஜொலிக்கத் தொடங்கினார்.

ஆனால், பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதியுடன் எழுந்த மோதல் காரணமாக எம்ஜிஆர் தனியாக அதிமுகவை என்னும் இயக்கத்தைத் தொடங்கி வளர்த்தெடுத்தார். 

சினிமாவில் எம்ஜிஆருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருந்ததோ, அது அளவுக்கு அவருக்கு அரசியலிலும் அவரை அரியணை ஏற வைத்து அழகு பார்த்தது.

அதே போல், கிட்டத்தட்ட 140 திரைப்படங்களில் நடித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக என்னும் கட்சியை வளர்த்தெடுத்த ஜெயலலிதா, தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார். 

தமிழ்நாட்டில் ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, 4 முறை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

அதே போல், திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியும் மொத்தம் 5 முறை முதலமைச்சராகத் தமிழக அரசியலில் கொடிகட்டிப் பறந்தார்.

அத்துடன், தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஓரிரு திரைப்படங்களில் நடித்து உள்ளார். 

முக்கியமாக, சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களின் பட்டியல் தமிழக அரசியலில் இன்று வரை தொடரவே செய்கிறது. 

தற்போது, சம கால அரசியலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி, இந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

அதே போல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று, அதன் மூலமாக அரசியலுக்கு வந்து, திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். 

நடிகர் உதயநிதி ஸ்டாலினும், இந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறார். 

இயக்குநரும், நடிகருமான சீமானும், கட்சித் ஆரம்பித்து தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் இறங்கி உள்ளார்.

அதே போல், நடிகர் ரஜினி மற்றும் கமலுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை குஷ்பு, பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். 

நடிகை ஸ்ரீப்ரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூரிலும், பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கத்திலும் போட்டிப் போடுகிறார்கள். 

குறிப்பாக, தமிழக அரசியலுக்குள் நுழைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில 
நாள்களுக்கு முன்பே, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து அவர் பின்வாங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.