“திடீரென கொரோனா WAR ROOM க்கு வந்த முதல்வர், “நான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறேன்” என்று, பொது மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2 வது அலையானது, மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்புகளும், தாக்கங்களும் கொரோனாவால் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இப்படியான நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

முக்கியமாக, மருத்துவ அவசர நிலை என்று சொல்லக் கூடிய அளவுக்குத் தொற்று பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் “வார் ரூம்” எனப்படும், “அவசர ஒருங்கிணைந்த கட்டளை மையம்” உருவாக்கப்பட்டு தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. 

இந்த வார் ரூமின் ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமது என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வார் ரூமின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வு செய்ய அழகு மீனா என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அத்துடன், ஆக்ஸிஜன் இருப்பு, தேவையைக் கண்காணிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமாரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் தேவையைக் கண்காணிக்க வினித் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா மருத்துவமனைகளைக் கண்காணிக்கக் கார்த்திகேயன் என்கிற அதிகாரியும் நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்புக்கான வார் ரூம் என்று அழைக்கப்படும் “கட்டளை மையத்தை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதாவது, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு இரவு 11 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார்.

அப்போது, அங்குள்ள அதிகாரிகளுடன் மையத்தின் செயல்பாடு குறித்து முதலில் கேட்டறிந்தார். அத்துடன், பொது மக்களின் அழைப்புக்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வந்த ஆய்வு செய்த முதலமைச்சர், “அவர்கள் எவ்வாறு பதில் அளிக்கிறார்கள்” என்று கவனித்தார்.

குறிப்பாக, அந்த நேரத்தில் பொது மக்கள் அழைத்த ஒரு அழைப்பை, முதலமைச்சர் ஸ்டாலின், அவரே அட்டன் செய்து, “நான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறேன்” என்று, பொது மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா கட்டளை மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை எந்த தடையும் இன்றி உடனுக்குடன் மேற்கொள்ள அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மு

முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வின் போது, முதலமைச்சரின் முதன்மை செயலாளர்களான உதயசந்திரன், உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நல்வாழ்வு திட்ட இயக்குநர் தாரேஸ் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும்,  கொரோனா கட்டளை மையத்தின் ஆய்வு குறித்து, தன்னுடைய டிவிட்டரில் முதல்வர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.