“என்னுடன் என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்” என்று, மணப்பெண் திடீரென்று கண்டிசன் போட்டதால், சற்று அதிர்ச்சியடைந்த மணமகன் அக்கா - தங்கை இருவருக்கும் ஒரே மேடையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான உமாபதி என்கிற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் தான், இந்த திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

அதே நேரத்தில், திருமணப் பெண்ணான 17 வயதான அந்த கல்யாண பெண்ணுக்கு 20 வயதான சுப்ரியா என்கிற அக்கா ஒருவரும் இருக்கிறார். இந்த 20 வயதான சுப்ரியா, சிறு வயது முதலே வாய் பேச முடியாத நிலையில் இருந்திருக்கிறார். 

அத்துடன், இந்த மாற்று திறனாளியான சுப்ரியாவுக்கு, அவரது பெற்றோர் பல ஆண்டுகளாக வரன் தேடி வந்தனர். ஆனால், அந்த பெண் மாற்று திறனாளி என்பதால், அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தங்களது மூத்த மகள் சுப்ரியாவிற்கு வரன் அமைவது ரொம்பவே சிரமம் என்று முடிவு செய்த அவரது பெற்றோர், இளைய மகளான 17 வயது மகளுக்கு திருமண செய்ய முடிவு செய்தனர். அதன் படி, தற்போது இளைய மகளுக்கு தற்போது வரண் அமைந்த நிலையில், திருமண நிச்சயமும் நடைபெற்றுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான், கல்யாண பெண்ணான அந்த 17 வயது பெண், மாப்பிள்ளையிடம் சென்று, “நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பினால், மாற்று திறனாளியான என் அக்கா சுப்ரியாவையும் நீங்கள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை உமாபதி, அதன் பிறகு சற்று யோசித்து அக்காவையும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்து உள்ளார். 

இதனையடுத்து, நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. இதில், ஒரே மேடையில் அக்கா - தங்கை என அருகருகே அமர வைக்கப்பட்டனர். அப்போது,  மாப்பிள்ளை உமாபதி, அக்கா - தங்கை இருவருக்கும் அடுத்தடுத்து தாலி கட்டினார். அப்போது, திருமணத்திற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அது நேரத்தில், அக்கா - தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் உமாபதி திருமணம் செய்துகொண்ட புகைப்படம், அந்த பகுதியில் வைரலானது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 17 வயதான சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்திற்காக, மாப்பிள்ளை உமாபதி மற்றும் அவரது உறவினர்களையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.