ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். A1 வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அனிகா சோட்டி, சஸ்டிகா ராஜேந்திரன், மொட்டை ராஜேந்திரன், மாருதி பிரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். 

கடந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சந்தானம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. படத்தில் சந்தானம் கானா பாடகர் என்று கூறப்படுகிறது. 

படத்தின் ட்ரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கானா பாடகராக இருக்கும் சந்தானத்தின் காதல் மற்றும் திருமணம் பற்றிய கதை தான் பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது. வட சென்னை கானா ரசனைக்கு ஏற்ப பாடல்களையும், பின்னணி இசையையும் தந்துள்ளார் சந்தோஷ் நாராயணன். 

இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு புளி மாங்கா புளிப் எனும் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் பாரிஸ் ஜெயராஜ் படக்குழுவினர். கானா முத்து பாடிய இந்த பாடல் வரிகளை ரோகேஷ் மற்றும் அசல் கோலார் எழுதியுள்ளனர். இந்த பாடல் காட்சியில் பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் நடனமாடியிருப்பது கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. 

கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிஸ்கோத் திரைப்படத்தை வெளியிட்டார் சந்தானம். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

சந்தானம் கைவசம் டிக்கிலோனா படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிஷ் தயாரித்த இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். டைம் ட்ராவல் பற்றிய படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.