சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியில், கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தக ரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி, பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.

வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியிருக்கிறது. இவ்வங்கியின் நிலையான வைப்புத் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் மத்திய அரசு நேற்று (நவம்பர் 17) வெளியிட்ட அறிவிப்பில், ``வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரையில் லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே வித்டிரா செய்ய முடியும். அதைத் தாண்டி எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுகள், கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணம் எடுப்பதாக இருந்தால் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் வர்த்தகத் தடையால் (moratorium) மக்கள் யாவரும் அதிர்ந்து போயினர்.

கடந்த சில வருடங்களாகவே தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்த இந்த வங்கி, கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் பெருத்த நஷ்டத்தையே கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015 முதல் லாபத்தில் இருந்து வந்த நிலையில் 2018 மற்றும் 2019-ல் பெரும் நஷ்டத்தை மட்டுமே கண்டது. இதனால் ஜூலை 2017-ல் 189 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று வெறும் 15.55 ரூபாயாக மட்டும் உள்ளது.

குறிப்பாக வட்டி வருவாயும் தொடர்ந்து இந்த வங்கியில் குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக கடந்த ஜூன் 2018-ல் 726.99 கோடி ரூபாயாக இருந்த வருவாய், ஜூன் 2019-ல் 623.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மார்ச் 2015-ல் 230.15 கோடி ரூபாயாக இருந்த செலவினம், மார்ச் 2019-ல் 401 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மற்ற வருவாய்களும் இந்த சமயத்தில் வெகுவாக குறைந்துள்ளன.

அதே போல நிறுவனத்தின் நிகர லாபமும் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருகிறது. மார்ச் 2015-ல் 132.20 கோடி ரூபாயாக இருந்த, இதன் நிகரலாபம், 20-ல் 180.21 கோடி ரூபாயாகவும் 2017-ல் 256.07 கோடி ரூபாயாகவும் 2018-ல் 584.87 கோடி ரூபாய் நஷ்டமும் 2019-ல் 894.10 கோடி ரூபாய் நஷ்டமும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக வருமானம் குறைந்து செலவினங்களே இந்த வங்கியை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இப்படியொரு அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இருப்பினும், லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என ரிசர்வ் வங்கி இன்று (நவம்பர் 18) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இன்று வெளியிட்ட செய்தியில்,

``லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி அளிப்பதற்கு வங்கியில் பணம் உள்ளது" என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், லட்சுமி விலாஸ் வங்கி DBS வங்கியுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு என்பது புதிதல்ல. அண்மையில், யெஸ் வங்கி திவால் ஆகாமல் இருக்க, அனைத்து வங்கிகளும் அதில் முதலீடு செய்தது தொடங்கி, பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டது வரை, தற்போதைய காலத்தில் வங்கிகள் திவால் ஆக அரசு விடாது என்பதற்கான உதாரணங்களாக உள்ளன.