சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மணி என்ற வேட்பாளருக்கு  ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், " நான் எப்படி முதல்வரானேன் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், இதை ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பேசி வருகிறார். 


கருணாநிதி மட்டும் நேரடியாகவா ஆட்சிக்கு வந்தார்? கருணாநிதியை நம்பியா அனைவரும் வாக்களித்தார்கள்? அண்ணாவை நம்பியே அப்போது அனைவரும் வாக்களித்தார்கள். அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல தான் நானும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.


திமுக தலைவர் தோல்வி பயத்தால் ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியை வெல்ல முடியாது என்று அவர் தெரிந்துகொண்டார். அதிமுகவுடன் அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, காலத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி.  இது திமுக-வுக்கு மூடுவிழா காணும் தேர்தல். 10 ஆண்டுக்காலம் வனவாசம் போயிருந்தார்கள். திமுக இன்னும் திருந்தவில்லை. இந்தத் தேர்தல்தான் அவர்களுக்கு இறுதித் தேர்தல், மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.