ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளி இயங்கிவரும் இடமானது வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடம்.

2013-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். 


அதன் பின்பும் வாடகையை சரியாக செலுத்த தவறியதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.


ஆனால் கொரோனா பரவல் காரணமாக , கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென எனவும்  அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கக்கோரியும் லதா ரஜினிகாந்த் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த கூடுதல் வழக்கில் தீர்ப்பளித்த  நீதிபதி சதீஷ்குமார் , ‘’ கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் மேலும் ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு தடைவிதித்துள்ளார்.  ஏப்ரல் 30, 2021-க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என லதா ரஜினிகாந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.