2021 ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால், “உள்நாடு மற்றும் வெளிநாட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்வதை உறுதி செய்த பிறகே, நான் விமானத்தில் ஏறுவேன்” என்று, கேப்டன் தோனி விடாபிடியாக கூறியுள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க பல்வேறு வழிகளை அணி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

எனினும், இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சத்தில் இருப்பதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரத்து செய்து உள்ளன. இதனால், சொந்த ஊர்களுக்கு வீரர்களை அனுப்பி வைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மட்டும் தனது வெளிநாட்டு வீரர்களை தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிற அணிகள் அனைத்தும், விமான நிறுவனங்களையே நம்பி இருக்கின்றன.

ஆஸ்திரேலியா தற்போது இந்தியாவிற்கு பயணத் தடை விதித்திருப்பதால், ஆஸ்திரேலியா வீரர்கள் முதலில் மாலத்தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 
மாலத்தீவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 
அதே போல், அகமதாபாத் மைதானத்தில் தற்போது 4 அணி வீரர்கள் முகாமிட்டு இருக்கிறார்கள். இதனால், அகமதாபாத்திலிருந்து பெரும்பாலான தனி விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட இருக்கின்றன. 

குறிப்பாக, இந்தியாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் மாலத்தீவுகளுக்கு புறப்பட இருக்கின்றனர். இந்த தகவலை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இங்கிலாந்து வீரர்கள் 11 பேரில் 8 பேர் ஏற்கனவே லண்டனில் தரையிறங்கி உள்ளனர். எஞ்சியவர்கள் விரைவில் செல்ல இருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்களை அவர்களது சொந்த நாடு மற்றும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை கேப்டன் தோனி மிக சிறப்பாக முன் நின்று செய்து வருவதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதில், சென்னை வீரர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தன்னுடைய பயணத்தை கேப்டன் தோனி, ஒத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தோனியின் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கிறது.

இது குறித்து சென்னை அணியின் உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “அணியில் உள்ள அனைவரும் விமானம் ஏறி வீடு செல்வதை உறுதி செய்யட்டும். அதன் பிறகு, கடைசி ஆளாக நான் விடுதியிலிருந்து வெளியே வந்து, விமானம் ஏறுகிறேன்” என்று, தோனி கூறியதாகக் குறிப்பிட்டு உள்ளார். 

“முதலில் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தோனி விரும்புகிறார் என்றும், அதன் பிறகு இந்திய வீரர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என்றும், இப்படியாக அனைவரும் தங்கள் ஊர்களுக்குப் பாதுகாப்பாக சென்ற பிறகு தான், ராஞ்சிக்கான விமானத்தில் நான் ஏறுவேன்” என்று, தோனி கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்த இக்காட்டான கொரோனா கால கட்டத்தில், அனைத்து வீரர்களும் தங்களது சொந்த பந்தங்களை, குழந்தைகளைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் நிலையில், கேப்டன் தோனி மட்டும், அனைவரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து விட்டு, கடைசியாக தன் ஊருக்கான விமானத்தை பிடிப்பேன் என்று கூறுவது, அவர் மீதான மதிப்பையும், மரியாதையை இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

டெல்லியிலிருந்து ராஜ்கோட், பெங்களூரு, மும்பை, சென்னைக்கு தனி விமானத்தை சென்னை அணி ஏற்பாடு செய்து உள்ளது. இதனால், கேப்டன் தோனி இன்று தான், அவரது சொந்த ஊர் செல்லும் விமானத்தில் ஏற இருக்கிறார்” என்றும், அவர் கூறினார். 

கேப்டன் தோனி பற்றி எவ்வளவோ பாசிட்டிவ் மற்றும் உத்வேகம் தரும் நிகழ்வுகளையும், செய்திகளையும் நாம் தொடர்ந்து பார்த்துப் படித்திருந்தாலும், பிரச்சனை என்று வரும் போது, தனது அணியின் வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், தளபதியாகவும் இருந்து, இவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது என்பது மிகுந்த சவாலான விசயம் என்று பார்க்கப்படுகிறது. அப்படியான சவலான அந்த பாதுகாப்பு விசயத்தை, கேப்டன் தோனி மிகச் சரியாக முன்னின்று செய்திருக்கிறார் என்றால், இதன் காரணமாகவே தோனி, உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராக இன்றளவும் கருதப்படுகிறார் என்பதற்கு, இந்த நிகழ்வும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.