முகக் கவசம்,சனிடைசர்,தனிமனித இடைவெளி,தனிமைப்படுத்துதல்,  ஊரடங்கு, பரிசோதனை ,மருத்துவ  பாதுகாப்பு வசதிகள் தற்போது தடுப்பூசி என நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கொரோனா வைரஸ்-ஐ கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. கொரோனா வைரஸ்-இன்  இரண்டாம் அலை முதல் அலையை விட இன்னும் தீவிரமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.  நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது .

சமீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகையான பூஜா ஹெக்டே  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட  நிலையில் மேலும் ஒரு இளம் நடிகை நோய்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். தளபதி விஜயின் பைரவா திரைப்படத்தில் கல்லூரிப் பெண்ணாகவும் கீர்த்தி சுரேஷின் தோழியாகவும் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. தொடர்ந்து விஷ்ணு விஷாலின் நடிப்பில்  வெளியான ராட்சசன், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களின் மூலமாக தமிழில் மிகவும் பிரபலம் அடைந்தார். 

young tamil actress ammu abirami tested covid 19 positive

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில்  நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். தற்போது தெலுங்கு சினிமாவிலும் காலடி வைத்துள்ள அம்மு அபிராமி ராட்சசன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில்  நடித்தார். தமிழில் பஞ்சதந்திரம், போக்கிரி மற்றும் உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த  மாஸ்டர் பரத்  கதாநாயகனாக நடித்த எஃப்.சி.யு.கே என்ற புதிய தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் , இந்த நிலையில் அம்மு அபிராமி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர்- 

“ காய்ச்சலின் சில அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்து பார்த்ததில் எனக்கு  கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நான் எனது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

விரைவில் நல்ல உடல் நிலையுடன் மீண்டு வருவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கு மிக்க நன்றி” 

என பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஆந்தாலஜி வெப்சீரிஸிலும் அம்மு அபிராமி  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்குதல் முதல் அதை விட இரண்டாம் அறையில் இன்னும் தீவிரம் அடைந்து இருப்பதால் முதலில் நாம்  எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோமோ அதைவிட இன்னும் அதிகம் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது.