கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.

மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த 9-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) மாற்றப்பட்டார். வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, வெற்றிவேலின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். ஏற்கெனவே சர்க்கரைநோயாளியான இவர், பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டுள்ளார்

வெற்றிவேலின் உடல்நலம் குறித்த இந்த மருத்துவமனை தரப்பு தகவல், அக்கட்சி தொண்டர்கள் முதல் டிடிவி தினகரன் வரை பலரையும் சோகத்தில் தள்ளியுள்ளது. 

வெற்றிவேலுக்கு கொரோனா கடந்த 3 தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு வரையில், கட்சியில் ஆக்டிவ்வாகவே அவர் இருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட, கட்சிப் பணிக்காக சென்னையில் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 3 தினங்களே ஆகியிருந்த நிலையில், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது பலரையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. வெற்றிவேலுக்கு,  ஏற்கெனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய நோயுடன் கோவிட் தொற்றும் இருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தனியார் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

விரைவில் பொருளாளர் வெற்றிவேல் குணமடைய, கட்சியினரும் தொண்டர்களும் மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்