தேமுதிக  தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீட்டிற்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகலில் ஒரு தொலைப்பேசி மிரட்டல் வந்து உள்ளது.

மிகச் சரியாக மதியம் 12.56 மணிக்கு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக” கூறி விட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டார். அத்துடன், அந்த மர்ம நபர் வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பைத் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று முழு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த சோதனையில் அப்படியான எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகே இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

அதே போல், இன்று மதியம் சரியாக 2.30 மணி அளவில் மீண்டும் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்புகொண்ட அந்த மர்ம நபர், “சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமபுரம் வெங்கடேஸ்வரா அப்பார்ட்மெண்டில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல்” விடுத்து உள்ளார்.

இதனால், பதறிப்போன போலீசார், இதையடுத்து சென்னை அபிராமபுரத்தில் நடிகர் தனுஷ் வசிக்கும் அபார்ட்மெண்டுக்கு போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மிரட்டலும் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனால், போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போன் அழைப்பானது மரக்காணம் பகுதியில் இருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்த செயலானது, மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் செயலாக இருக்கும் என்று போலீசார் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தமிழக போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இந்த இளைஞர், இதற்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், நடிகர் அஜித் ஆகியோரின் வீடுகளுக்கு இதற்கு முன்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துச் சிக்கியவர் ஆவர். 

மன நிலை பாதிக்கப்பட்ட அவரின் மனதில், காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து மிரட்டல் விடுப்பது அவருடைய மனதில் ஆழமாகப் பதிவாகி விட்டது என்றும், இதனால் அவர் தொடர்ந்து யாராவது ஒரு விஐபி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்து போலீசாருக்க தொல்லை தருகிறார் என்றும்,  இதைப் புரளி என போலீஸார் தள்ளி விடவும் முடியாது என்பதால், சென்னை போலீசார் அவ்வப்போது தொடர்ந்து நிம்மதியிருந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.