“10 ஆம் வகுப்பு படித்த சச்சின் தெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?” என்று, தமிழக அரசைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்ற இளைஞர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “இந்தியாவில் உள்ள சிறப்புத்திறன் குறைந்த மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் அதிகமான அளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். இப்படிப்பட்ட விளையாட்டு வீரர்கள், மத்திய - மாநில அரசு சார்பில், அவர்களை ஊக்குவித்து ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்குப் பரிசுகளும் வேலை வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “இந்த வீரர்களையும் மத்திய - மாநில அரசுகள் சமமாகப் பார்ப்பதில்லை என்றும், வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், எனவே தமிழ் நாட்டில், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும், அந்த மனுவில் கூறியிருந்தார்.

குறிப்பாக, மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கங்களையும், பல்வேறு பதக்கங்களையும் வென்று உள்ளார். எனினும், அவரை தமிழ் நாடு அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்து இருந்தது.

மதுரேசன் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?” என்று சரமாரியாகத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“தமிழ்நாட்டைக் காட்டிலும் பிற மாநிலங்களான தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது” என்பதனையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

“தமிழ்நாட்டில் 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் 10 வது மட்டுமே படித்துள்ள காரணத்தால், அலுவலக உதவியாளர் பணி கொடுத்துள்ளனர். விளையாட்டு எது என்பது முக்கியமல்ல, அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவர் விளையாட்டில் சாதித்து இருக்கிறார் என்பதே முக்கியம்” என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

“இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் ஆகிய 3 துறைகளின் பிரபலங்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளதாகவும்” நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

“தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது? என்றும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசால் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது? என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? என்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் அதிரடியான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து உள்ளனர். இதனால், இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.