தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி அசத்தியது. அத்ரங்கி ரே பாடல் காட்சியின் படப்பிடிப்பு போல் தெரிகிறது. அங்குள்ள குரூப் டான்சர்களுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் காட்சியளித்தார் தனுஷ். 

இதனைத்தொடர்ந்து சில நாட்கள் முன்பு கேமராவுடன் தனுஷ் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் அத்ரங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் படக்குழுவினரோடு தனுஷ் உணவு உண்ணும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் நடிகை டிம்பிள் ஹயாத்தி கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. 

வாரணாசியில் சில முக்கிய இடங்களில் அத்ரங்கி ரே ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் இந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், இந்த லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படியிருக்க தனுஷ் மற்றும் சாரா அலிகான் இருவரும் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரணாசியில் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. 

நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

அத்ரங்கி ரே படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் D43 படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதைத்தொடர்ந்து கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.