நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி, 2006-ம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் விசில், கண்ட நாள் முதல் படத்தில் கிரெடிட் இல்லாத தோற்றத்தில் வந்தாலும், வல்லவன் படத்தில் தான் பிரேம்ஜி நடிகராக படம் முழுவதும் வந்திருப்பார். இன்று வரை எந்த மேடையாக இருந்தாலும், தன்னை அறிமுகப்படுத்தி வைத்த சிம்பு அவர்களுக்கு தனது முதல் நன்றியை கூறுவார் பிரேம்ஜி. 

இந்நிலையில் சிம்பு இயக்கத்தில் வெளியான வல்லவன் திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவானதையொட்டி STR ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். அதில் ஒரு போட்டோவில் அறிமுகம் பிரேம்ஜி என இருந்தது. இதைக்கண்ட பிரேம்ஜி, 14 years of Premgi என குறிப்பிட்டு சிம்புவுக்கு நன்றியை தெரிவித்தார். 

வல்லவன் படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சத்திய சோதனை. கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. 

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. காவல் நிலையத்தில் பாட்டியுடன் காவல் அதிகாரிகள் மற்றும் பிரேம்ஜி இருப்பது போல் உள்ளது. போஸ்டரை பார்க்கையில் படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது என்றே கூறலாம். இந்த சத்திய சோதனை படத்தின் முதல் பார்வை போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்தது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் பிரேம்ஜி. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் உள்ளனர். 14 ஆண்டுகளாக திரை ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் பிரேம்ஜியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ணமாட்டோமா....