பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்ய முயன்றபோது கீழே விழுந்த வீடியோ காட்சியொன்று, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா குரு, பாபா ராம்தேவ். இவரது நிறுவனம் சமீபத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியது.

குறிப்பாக, கொரோனாவுக்கு நேரடியாக மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அதை அறிமுகப்படுத்தவும் செய்திருந்தார், இவர். அவருக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் 'கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில், கடந்த ஜூன் மாதமே அறிமுகப்படுத்தியிருந்தார் பாபா ராம்தேவ்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பிறகு, தற்போது மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா  செய்தார். மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கீழே விழுந்து எழுந்து புன்னகையுடன் வேகமாக நடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவருக்கு இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. யானை அசைத்ததும் கீழே விழுந்து, அவர் எழுந்து விரையும் இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

யோகா குரு பாபா ராம்தேவ் மதுராவில் உள்ள ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமீபத்தில் யோகா செய்து காண்பித்தார். அப்போதுதான் யானை மீது ஏறி யோகா செய்ய முயன்றார். ஆச்சர்யத்தில் அந்தக் காட்சியை அருகிலிருந்தவர்களி வீடியோவாக எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக, பாபா ராம்தேவ் ஏறி அமர்ந்திருந்த யானை அசைந்ததிருக்கிறது. இதனால் பாபா ராம்தேவ் அப்படியே தவறி கீழே விழுந்திருக்கிறார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே விழுந்த உடனே சுதாரித்து எழுந்த ராம்தேவ், விறுவிறுவென நடந்து சென்றதால், பிரச்னை ஏதுமில்லை என சொல்லப்பட்டது. இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், பாபா ராம்தேவை கேலி கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிளில் சென்றபோது பாபா ராம்தேவ் தவறி விழுந்தபோது எடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சைக்கிளிலிருந்து அவர் விழுந்த நிகழ்வை தொடர்ந்து, அவருக்கு பலத்த அடிபட்டுவிட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார், என்று கூறி பலரும் மேற்கண்ட புகைப்படத்தை பகிர தொடங்கியுள்ளனர்.

ஆனால், இந்த புகைப்படத்திற்கும், பாபா ராம்தேவ் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிகழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லப்பட்டது. சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாகச் செய்திகள் வெளியானபோதும், அதனால் அவர் காயமடைந்தார் என்ற செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை.