அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்துகொண்டு இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் தலைமைத் தேர்தல் அதிகாரியால் 
அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழக்தின் ஒட்டு மொத்த அரசியல் கட்சியும் விறுவிறுப்படைந்து உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய கட்சியான அதிமுகவும் - திமுகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இரு முக்கியக் கட்சிகளும், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இப்படியான சூழ்நிலையில் அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி உடன்பாடு முடிவாவதில் நேற்று வரை தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. 

அதிமுக கூட்டணியில், பாமக வுக்கு வழங்கியதை விட கூடுதலான இடங்கள் வேண்டும் என்று கேட்டு தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், இதனைக் கேட்டு அதிமுக தரப்பு சற்று அதிர்ச்சியடைந்த நிலையில், தீவிரமாக யோசித்து வந்தது. 

ஆனால், இது தொடர்பான முடிவும் எதுவும் சொல்லப்படாமல், அதிமுக தரப்பில் தேமுதிக வுக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு, நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க தேமுதிக மறுத்து விட்டதாகத் தகவல்கள் வெளியானது. 

இதனால் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் குசுகுசுக்கப்பட்டது. அதே நேரத்தில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இப்படியான நிலையில் தான், தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நேற்று இரவு அதிரடியான ஒரு பதிவைப் பதிவிட்டார். 

அந்த பதிவில், “நமது முதல்வர் என்ற வார்த்தைக்கு அருகே விஜயகாந்த் படமும், நமது கொடி என்ற வார்த்தைக்கு அருகே தேமுதிக கட்சி கொடியின் படமும், 
நமது சின்னம் என்ற வார்த்தைக்கு அருகே முரசு சின்னமும் இருந்தது. இது, வைரலானது.

இதனால், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி என்பதைச் சொல்லாமல் சொல்லும் பதிவு தான் இது” என்றும், அரசியல் வட்டாரத்தில் 
பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அதிமுக, சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக, தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளது.
 
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வுக்கு முன்னதாக 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதற்கான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது. இதன் தொடர்ச்சியாகவே, தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முன் வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக, தேமுதிக மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்கள். இது, தோல்வியில் முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷிடம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்து உள்ளார். இந்த முறையும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையில் தேமுதிக இறங்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால், அதிமுக - தேமுதிக கூட்டணியானது இன்னும் உறுதி செய்யப்படாத கூட்டணியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.