தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன். பெரிதாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவருக்கு நாயகனாகும் ஆசை வந்தது. தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில், சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் லெஜண்ட் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போதுதான் படத்திலிருந்து முதன்முறையாக இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லெஜெண்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.