ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மத்தியில், சசிகலா ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் போஸ்டர் யுத்தத்தில் குதித்து உள்ளதால், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் சூடு பிடித்து உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அனல் வீச முக்கிய காரணமாக இருக்கும் ஒரே விசயம், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தான், பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது.

இதன் காரணமாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் தற்போது ஒவ்வொன்றாக பொது வெளியில் பார்க்க முடிகிறது.

அத்துடன், “ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே வருகிறார்” என்று, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ள சம்பவம், அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தரப்பினர் மீது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது, தற்போது காவல் நிலையம் வரை சென்று நேற்றைய தினம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருப்பது, அதிமுகவில் இன்னும் பரபரப்பை பற்ற வைத்து உள்ளது. 

இப்படியாக, ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொள்ளும் நிலையில், இருவரும் தனித் தனியாக தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டும் வருகின்றனர்.

அதே நேரத்தில், ஏற்கனவே அதிமகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சற்று அமைதி காத்து வந்த நிலையில், தற்போது இந்த அரசியல் களத்தில் மீண்டும் குதித்து இருக்கிறார்கள்.

அதாவது, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்திற்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களம் இறங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

குறிப்பாக, அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருப்பதை வெளிப்படையாகவே கடந்த சில நாட்களாக அதிமுகவில் போஸ்டர் யுத்தம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு வருகிறது. 

அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித் தனியாக போர்க்கொடி தூக்கி மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வெளிப்படையாகவே மோதிக்கொண்டு வருகின்றனர். 

இது மட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்களிலும் ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பினரும் மாறி மாறி வசைபாடும் விதமாக கருத்துக்களையும், போஸ்டர்களையும் பரப்பி வருகின்றனர். 

ஆனால், இந்த விசயத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களும் சற்றே அமைதி காத்து வந்த நிலையில், தற்போது சசிகலா ஆதரவாளர்களும் திடீர் போஸ்டர் யுத்தத்தில் களம் இறங்கி உள்ளனர்.

அதன்படி, “அதிமுகவின் பொதுச்செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே!” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் தற்போது ஒட்டப்பட்டு உள்ளன. 

குறிப்பாக, “கழகத்தை காத்திட, எங்களை வழி நடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக” என, சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமைக் கழகம் அருகே போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரங்கள் தற்போது சசிகலா மையப்படுத்தி ஒட்டி போஸ்டர்களால் மீண்டும் கூடுதல் கவனத்தை பெற்று, அதிமுக உட்கட்சி பூசல் விவகாரத்தில் மேலும் பரபரப்பாகி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமாக, ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது சசிகலாவும் நேரடியாகவே களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதால், ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உரைந்து உள்ளனர்.

இதனிடையே, “நமது அம்மா” ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகி உள்ளதும், அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.