தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். மீனா-வித்யாசாகர் தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய அலர்ஜியால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான வித்யாசாகருக்கு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு பிறகு நுரையீரலில் ஏற்கனவே இருந்த அலர்ஜின் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்ததால் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு வித்யாசாகர் நேற்று (ஜூன் 28ம் தேதி) இரவு 9 மணிக்கு உயிரிழந்தார்.

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதிச்சடங்குகள் இன்று (ஜூன் 27ம் தேதி) மதியம் 2 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது.நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.