இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். படத்தின் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். 

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. 

யுவன் ஷங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் தட்டிப்புட்டா பாடல் வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜா பாடிய இந்த பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். மைனா சுகுமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தொடர்ந்து படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, தற்போது மும்பைகர் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்ராம் இயக்கி வரும் VJS 46, பாலிவுட்டில் மும்பைகர் போன்ற படங்களும் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.