பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் மசோதாக்களுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால், வேளாண் மசோதாக்களில் உள்ள சாதக பாதங்களை தற்போது பார்க்கலாம்...

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்ப்பின் உச்சக்கட்டமாக நாடாளுமன்றத்திலேயே அவையை நடத்திய துணைத்தலைவர் முன்னிலையில் சட்ட புத்தகத்தைக் கிழித்து வீசி தங்களது எதிர்ப்புகளைக் கடுமையாகப் பதிவு செய்தனர். 

அத்துடன், அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நேற்றும் நாடாளுமன்றத்தில் அரங்கேறின. இதனால், கடும் அமளியும், அமளியால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல், அவையில் ஏற்பட்ட உச்சக்கட்ட அமளியால், மாநிலங்களவை துணைத்தலைவர், ஆளும் கட்சியும் நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர் எனவும் மக்கள் யாரும் பார்க்காமல் இருக்கும் விதமாக ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளதாகவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஒ பிரையன் குற்றச்சாட்டினார்.

அதாவது, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று அதிரடியாகவே நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய இந்த மசோதாவைக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது என்றும், வாக்குச் சீட்டு அடிப்படையிலேயே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

அதே நேரத்தில், இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வு செய்த பிறகே அமல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ், வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக திடீரென்று அறிவித்தார்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த காட்சிகள் அனைத்தும் நாடு முழுவதும் ராஜ்யசபா 
டிவி மூலம் நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இதனால், அதிரடியாக அந்த நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஒ பிரையன், “நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மத்திய அரசும், மாநிலங்களவை துணைத்தலைவரும் மீறி விட்டனர்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

அத்துடன், “இது வரலாற்றில் மிகவும் மோசமான நாள் என்றும். நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவர்கள் ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர் என்றும், அவர்கள் ராஜ்யசபா டிவியும் கூட தணிக்கை செய்யும் அளவுக்குச் செயல்படுகிறார்கள்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, மத்திய அரசின் இந்த வேளாண் மசோதாக்களால் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்றும், நிலவுடைமை விவசாயிகளுக்குப் பாதகம் ஏற்படும் என்றும், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதே நேரத்தில், அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மாநிலத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியே கலவர பூமியாகக் காட்சி அளித்தன. 
இதனையடுத்து, போலீசார் அவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் என்ற அமைப்பினரும் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஏராளமான விவசாயிகளைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டனர். இந்த அமைப்பு வரும் 24 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது.

மேலும், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் மசோதாக்கள், ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடாக இருப்பதாக” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அத்துடன், “வேளாண் மசோதா என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது” என்றும், கூறியுள்ளார். 

“மோடியின் ஆணவம் மிகுந்த இந்த அரசாங்கம், மண்ணைப் பொன்னாக மாற்றும் விவசாயிகளின் கண்களில் ரத்தக் கண்ணீரை வர வைப்பதாகவும்” ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அதே போல், “விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று ஆதரிப்பதாகக் கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக விமர்சனம் செய்து உள்ளார்.

“விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்துவிட்டு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானது” என்றும், பகிரங்கமாக வெளிப்படையாகவே விமர்சனத்தை வீசி உள்ளார்.

முக்கியமாக, “ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு. தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்” என்றும், முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரையும் வழங்கி உள்ளார்.

இதனையடுத்து, தமிழகம் சார்பில் வேளாண் மசோதாவுக்கு எதிரான அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழகம் அளவிலான அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதனால், வேளாண் மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.