இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாய் பரவி வரும் நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி, டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதேபோல மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்ட 8 உறுப்பினர்களையும், அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. முரளீதரன் அனுப்பிய நோட்டீஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் அவை நடவடிக்கையில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், காலை 10 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு 10.36 மணிக்கும், 11.07 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷுக்கு  எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக எதிா்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தையும் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார். முன்னதாக, மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்ற நடவடிக்கையை அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கையாண்ட விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக 12 எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றப்பட்டிருந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில், சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் யாவும் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வுகளை தொடர்ந்துதான் தொடர்ச்சியாக மற்றவையெல்லாம் நடந்து, இறுதியில் அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அனுப்பப்பினர். 

இறுதியில் இதுவரை அவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்தனர்.  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு ஆதரவாக பிற எம் .பிக்களும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இப்படி மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்து வரும் அமளியால் இன்று காலையிலிருந்து நான்கு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.