கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி, உணவின்றி அவதிப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் வேலை செய்த வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் குழந்தைகள், மனைவியுடன் தங்களது பொருட்களை சுமந்துகொண்டு கொளுத்தும் வெயிலில் நடந்தே செல்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் வாகனப் போக்குவரத்தை ஏற்பாடு செய்யாமல், இவர்களைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மோடி அரசு, பொதுத்துறைகளை விற்பனை செய்வதிலே கவனமாக உள்ளதாக மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர். இதில் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மோதியும் வாகனங்கள் மோதியும் கொடூரமாக உயிரிழந்துள்ளனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து அன்றாடம் பல சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களுக்காக விடப்படுகின்றன. தொழிலாளர்கள் ரயிலில் ஏறும் போதும், வழியில் அவை நிறுத்தப்படும் போதும் உணவளிக்க திட்டமிடப்பட்டு வந்தது. இவை, அரசு அல்லது சமூகவேவை அமைப்புகளால் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் உணவு வழங்குவதில் பெரும் குறைபாடுகளால் உயிர்கள் பலியாகியுள்ளன என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்களில் 97 பயணிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு ராஜ்யசபாவில் அதிகாரபூர்வமாக இன்று தெரிவித்திருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் 68 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அந்த காலத்தில் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தனர் என சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தகவல்கள் தங்களிடம் இல்லை என தொழிலாளர் அமைச்சகம் பதிலளித்தது. இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஒ'பிரைன் ஷ்ராமிக் ரயில்களில் பயணித்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ``ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆகஸ்ட் 31 வரை 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஓடின. இதில் 63 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளனர்

செப்டம்பர் 9 வரை, பயணிகளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேரின் பிரதே பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில் பலரும் இதய முடக்கம், இதய நோய், மூளையில் ரத்த கசிவு, முன்பே இருக்கும் நாள்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர். ஷ்ராமிக் ரயில்களை இயக்க மாநில அரசுகளிடமிருந்து ஆக., 31 வரை ரூ.433 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது"

என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கில் இப்படியான உயிரிழப்புகள், மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது என மக்களும், இந்த இறப்புகள் அலட்சியத்தால் ஏற்படுபவை என்று எதிர்க்கட்சிகளும் சொல்லி வருகின்றன. கடந்த மே மாதம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உணவு, உரிய நேர சிகிச்சை இல்லாமல் 3 குழந்தைகள் மற்றும் 9 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்த செய்தி, நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.