“நாடகமாடி கவனத்தை திசை திருப்பி, நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார்” என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மிக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

“டாய்கேத்தான் - 2021” என்ற தலைப்பில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி மூலமாக
கலந்துரையாடினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது” என்று, குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர் தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்றும், அவர் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறிய இந்த கருத்து குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பக்கத்தில் கருத்து ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், “குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்” என்று, சுட்டிக்காட்டி உள்ளார். 

மேலும், “பிரதமர் இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார் என்றும், அவர் இந்தியாவின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என்றும், மிக கடுமையாக பிரதமர் மோடியை, ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். 

அதே போல், “உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ், நாடு முழுவதும் 3 ஆம் அலையை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையிலும், டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் வகையில், ஏன் இன்னும் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

“இந்த கேள்வியானது மோடி அரசுக்கானது என்றும், டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பெரிய அளவில் பரிசோதனைகள் உள்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை? என்றும், டெல்டா பிள்ஸ் வைரஸ் மீதான தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் செயல்பாடு எப்படி இருக்கும்? என்றும், 3 ஆம் அலையில் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க என்ன திட்டத்தை வைத்துள்ளீர்கள்?” என்றும், ராகுல் காந்தி அடுக்காடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.