பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருந்த பாஜக எம்.எல்.ஏ. சாய்  சரவணகுமார்,  புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றிருப்பது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், ஜனநாயக மாதர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார்.

புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள கல்லூரியில் அப்போது தான் சேர்ந்து படித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். 

இந்த சூழலில், சிறுமியின் தாய் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, வீட்டிலிருந்து வெளியே கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த 17 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

இதனைத் தெரிந்துகொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்ற நபர், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து, அவரை மிரட்டியும், தாக்கியும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அத்துடன், சிறுமியை பலாத்காரம் செய்ததை, அவர் தனது செல்போனில் காணொளியாகவும் எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை கட்டியே, அந்த சிறுமியை அந்த நபர் தொடர்ச்சியாகப் பல முறை மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 

இதனால், சிறுமி கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமி கேரளாவில் உள்ள தனது சித்தி வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு, இந்த சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், “சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பதாக” கூறி இருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, சிறுமியிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். அப்போது, அந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை எல்லாம் கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, போலீசாரிடம் புகார் அளித்தனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி, கடந்த 19 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் சித்தி இது தொடர்பாகத் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அருண் குமாரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அது நேரத்தில், தனது மகளுக்கு நேர்ந்த இந்த பாலியல் பலாத்கார கொடுமை குறித்து, அந்த சிறுமியின் தாயார், புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கு வழக்குப் பதிவுகூட செய்யாமல் அப்பகுதி காவல் துறையினர் மிகவும் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.

போலீசாரின் இந்த அலட்சியத்திற்குப் பின்னால், குற்றச்சாட்டப்பட்ட அருண்குமாருக்கு ஆதரவாகப் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணகுமார் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்த விசயம், புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தான், புதுச்சேரி அமைச்சரவைப் பட்டியலில் பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணகுமார் இடம் பெற்றுள்ளதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில், “குற்றவாளி அருண்குமாரைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது மாமாவும், தற்போது பாஜக சார்பில் அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்துள்ள சாய் சரவணகுமாரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும், என் மகள் உயிரிழப்புக்குக் காரணமான அருண்குமாரை கேரளா நீதிமன்றத்திலேயே கடுமையான தண்டனை கொடுத்துத் தண்டிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

மேலும், “பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணகுமார் ரவுடிகளை வைத்து என்னை மிரட்டி வருகிறார்” என்றும், அந்த தாயார் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். இந்த சம்பவம், புதுச்சேரி அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது.