இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான சுரேஷ்  ரெய்னா 2004ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமானார். தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார்.
 
இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா மிடில் ஆர்டரில்  களமிறங்கி இந்தியாவின் வெற்றிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சேசிங்கில்  M.S.தோனியுடன் ரெய்னா களத்தில் நின்றால் வெற்றி உறுதி. சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார்.

சென்னையில் தோனியை தல என செல்லமாக அழைக்கும் ரசிகர்கள் ரெய்னாவை சின்ன தல என்று அழைப்பதுண்டு. தமிழ் திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விருது விழாவில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய சுரேஷ் ரெய்னா தன்னுடைய பயோபிக் திரைப்படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எழுப்பிய கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார். 

தன்னுடைய பயோபிக் திரைப்படத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் , குறிப்பாக நடிகர் சூர்யா நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக தான் சூர்யாவின் தீவிர ரசிகன் என்றும் சூர்யா திரைப்படங்களை தவறாமல் பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்த சுரேஷ் ரெய்னா. தற்போது தன்னுடைய பயோபிக் திரைப்படத்திற்கும் நடிகர் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருப்பது சமூக வலைதளங்கள் வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.