தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் உயர்ந்து நிற்கிறார் தளபதி விஜய். கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக இந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக தளபதி விஜயுடன் இணைந்து பவானி கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார்.
 
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் , தளபதி 65 திரைப்படத்தை இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். முன்னணி தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவரான பூஜா ஹெக்டே முதல்முறையாக தளபதி விஜயுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பீஸ்ட் (BEAST) என பெயரிடப்பட்ட தளபதி 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. துப்பாக்கி ஏந்தியபடி மாஸ்ஸான லுக்கில் தளபதி விஜய் மிரட்டும் இந்த பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களை அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் (BEAST படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார். 

தளபதி விஜய்யின் பீஸ்ட் (BEAST) படத்தின் போஸ்டரை பகிர்ந்து ஒற்றை வார்த்தையில் தளபதி விஜயைப் பற்றி தெரிவிக்குமாறு ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் VERY COOL என தெரிவித்திருக்கிறார். தளபதி விஜய் பற்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்ட VERY COOL என்ற வார்த்தை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.