ராகுல் காந்தி நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

அப்போது, இந்த கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். 

ராகுல் காந்தி அந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடியை மிக கடுமையாக தாக்கி பேசினார். 

ராகுல் காந்தி பேசும் போது, “நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடி இருக்கிறார்” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன், இந்திய தொலைக்காட்சிகளில், இது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

குறிப்பாக, ராகுல் காந்தியின் மோடி மீதான இந்த விமர்சனம், சாதி ரீதியாக இருப்பதாக கூறி, மோடி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.என் தவே, “அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்கக் கோரி” நோட்டீஸ் அளித்தார். 

அதன் படி, இந்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, “ராகுல் காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார்” என்று உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்டா, “இது ஒரு போலியான அவதூறு வழக்கு என்றும், வழக்கு விசாரணையின் போது, ராகுல் காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை முன் வைப்பார்” என்றும், தெரிவித்தார்.

அத்துடன், “நாளை காலை 10 மணிக்கு வரும் ராகுல் காந்தி, மதியம் 12.30 மணிக்கு டெல்லி திரும்புவார் என்றும், அவர் முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் ஆஜராகவே வருகிறார்” என்றும், அவர் கூறினார்.

இதனிடையே, அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக நேரில் வருகை தர உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.