இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் என்பதால், சுகாதாரம் சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்கையேவும், மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்ற அளவுக்கு அறிவுரைகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்தளவுக்கான சுகாதாரம் சார்ந்த அக்கறை, வழக்கத்தைவிட அதிகமான மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்கின்றது. அந்த வகையில், இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையான கடந்த 4 மாதங்களில் சுமார் 18,006 டன் மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கூறியுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா 3,587டன் கழிவுகளை உற்பத்தி செய்தது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு 1,737 டன் கழிவுகளை உருவாக்கியது. இதில் அதிகபட்சமாக கடந்த செப்., மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கோவிட்-19 கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதுவரையான கழிவுகளில் இது அதிகபட்சம்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

''* கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக 18,006 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன. இந்தக் கழிவுகள் அனைத்தும் 198 பொது மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் மையம் மூலம் சேகரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.

* கொரோனாவில் உருவான மருத்துவக் கழிவுகள் என்பது பிபிஇ ஆடை, முகக்கவசம், ஷூ கவர், கையுறை, டிஷ்யு, ரத்தம் தோய்ந்த பொருட்கள், ரத்தம் தோய்ந்த மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டர், பஞ்சு, ரத்தக்கறையுடன் கூடிய படுக்கை விரிப்பு, நீடில், சிரிஞ்ச் உள்ளிட்டவை அடங்கும்.

* நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் 3,587 டன் மருத்துவக் கழிவுகளைக் கடந்த 4 மாதத்தில் உருவாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் (1,737 டன்), குஜராத்(1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரப் பிரதேசம் (1,432 டன்), டெல்லி (1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1000 டன்) மாநிலங்களில் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன.

* கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக நாட்டில் 5,490 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 622 டன் கழிவுகள் உருவாகியுள்ளன.

* அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 543 டன் மருத்துவக் கழிவுகள், மகாராஷ்டிராவில் 534 டன், உ.பி.யில் 507 டன், கேரளா 494 டன் கழிவுகள் உருவாகியுள்ளன. டெல்லியில் 382 டன் கழிவுகள் செப்டம்பரில் உருவாகியுள்ளன.

* ஆகஸ்ட் மாதத்தில் 5,420 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,359 டன், கேரளா, கர்நாடகாவில் தலா 588 டன் கழிவுகள் உருவாகின.

* ஜூலை மாதத்தில் 4,253 டன் மருத்துவக் கழிவுகள் உருவானதில் மகாராஷ்டிரவில் அதிகபட்சமாக 1,180 டன், கர்நாடகாவில் 540 டன், தமிழகத்தில் 401 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின.

* ஜூன் மாதத்தில் 3,025 டன் கழிவுகள் உருவாகின. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 524 டன் மருத்துவக் கழிவுகளும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 350 டன் கழிவுகளும் உருவாகின. டெல்லியில் 333 டன், தமிழகத்தில் 312 டன் மருத்துவக் கழிவுகளும் உருவாகின''.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் தரப்பட்டுள்ளது.