பீட்சா திரைப்படத்தின்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் பாபி சிம்ஹா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த பாபி சிம்ஹா ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து கதாநாயகனாகவும் உருமீன், கோ-2, பாம்புசட்டை, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இறைவி,மெட்ரோ, சாமி-2, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் அசத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் வசந்த முல்லை எனும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ரமணன் புருஷோதமா எழுதி இயக்கியுள்ளார். பாபிசிம்ஹாவின் மனைவியான ரேஷ்மி மேனனின் முத்ரா'ஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ராம் டல்லூரி புரோடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வசந்தமுல்லை திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.பாலிவுட்டில் வெளியான மிஷன் மங்கள் மற்றும் தமிழில் நடிகர் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்து வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை காஷ்மிரா பரதேசி வசந்த முல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

முன்னதாக சமீபத்தில் வசந்த முல்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் இன்று டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வெளியான அசத்தலான டீஸர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மூன்று மொழிகளிலும் வசந்த முல்லை திரைப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.