திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளையுடன் பரப்புரை நிறைவு பெற உள்ள நிலையில், அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாதிப்பால் பொது மக்கள் பலரும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இப்படியான நிலையில், திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.

அதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் தேனியில் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது என்றும்,  அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும், கூறப்பட்டது. 

நேற்றைய தினம் ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்தார். இதனையடுத்து, அவர் பரப்புரையைப் பாதியில் விட்டு விட்டு சென்னை திரும்பினார். 

இந்த நிலையில், அவருக்கு இன்று காலை தொண்டை கரகரப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், கனிமொழிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தனது வீட்டிலேயே அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியத்துக்குமேல் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், திமுக தேர்தல் பரப்புரையின் போது கனிமொழியிடம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த மற்றவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அது போல், திமுக இளைஞரணி செயலர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்து உள்ளது.

“மறைந்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்து உதயநிதி அவதூறாகப் பேசியதாக பாஜக புகார் அளித்துள்ளதாக” மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.