அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரெமோ திரைப்பட புகழ் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான 'சுல்தான்' திரைப்படத்திற்கு பலரும் பலவிதமாக விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தற்போது அவர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

சுல்தான் திரைப்படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு,சிங்கம் புலி என பலர் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழுக்கு வருகிறார் ரஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தமிழில் வெளியான தெலுங்கு டப்பிங் படங்களால் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான ராஷ்மிகா மேனன் முதன்முறையாக நேரடியாக சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழை போலவே தெலுங்கிலும் கார்த்திக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. இவரின் முந்தைய திரைப்படங்களும் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. இதனால் சுல்தான் திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வினும், பின்னணிக்கு யுவன் ஷங்கர் ராஜாவும் இசை அமைத்துள்ளனர். 

சுல்தான் திரைப்படம் கமர்ஷியல் பேக்காக வெளியாகி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், சினிமா விமர்சகர்களும் இந்த படத்திற்கு விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் தயாரிப்பில் வெளியான பல படங்களுக்கு விமர்சகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் எப்போதும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். சுல்தான் திரைப்படம் பற்றி சிலருக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். நான் அந்த கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் அதே நேரம் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கண்ணியமாக இருப்போம். 

எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தட்டுகளுக்கும், உங்கள் தட்டுகளுக்கும் உணவைக் கொண்டு வருவது சினிமா மற்றும் பார்வையாளர்கள்தான் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.