தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அவரின் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் வேலைகள் தொடரப்பட்டது. 

அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தவிர அந்தப் படத்தில் போலீஸ் உடையில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். ஏற்கனவே மாநாடு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், இது கிளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறாராம் சிம்பு. கொரோனா காலத்திலும், தவறாமல் படப்பிடிப்புக்குச் சென்று படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.