கொரோனாவால் பாதித்த தனது மாமனாரை, அவரது மருமகள் முதுகில் சுமந்து சென்று, மருத்துவமனையில் சேர்த்த நிகழ்வால், பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மருத்துவர்களும் நெகிழ்ந்து வெகுவாக அந்த பெண்ணை பாராட்டி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் தான் இப்படியான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகளுக்கு நெட்டிசன்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துலேஸ்வர் தாஸ், தனது மகன் சூரஜ் உடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மகன் சூரஜ்கு அந்த பகுதியைச் சேர்ந்த நிகாரிகா என்ற இளம் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஒன்றாக வசித்து வந்தனர்.

தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலையாகக் கோரத் தாண்டவம் ஆடி வருவதால், பலரும் வேலை இழந்து சாப்பிடக் கூட வழியிலாம் இருந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில், மகன் சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார். இதனால், வீட்டில் இருந்த 75 வயதான மாமனார் துலேஸ்வர் தாஸை, அவரது மருமகள் நிகாரிகா கவனித்து வந்தார். ஆனாலும், மாமனார் துலேஸ்வர் தாஸிற்கு காய்ச்சல் வந்துள்ளது. பரிசோதனை செய்து பார்த்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதனால், 75 வயதான கொரோனா பாதித்த மாமனார் துலேஸ்வர் தாஸை,  சற்று தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், கணவன் வீட்டில் இல்லை. வேலை விசயமாக வெளியூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. உதவிக்கு அந்த ஊரில் உள்ளவர்களை யாரையாவது அழைக்கலாம் என்றால், கொரோனா பீதியால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால், தனது மாமனாரை மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பை அந்த மருமகள் சுமக்கத் தொடங்கினார்.

அதன்படி, கொரோனா பாதித்த தனது 75 வயது மாமனாரை, தனது முதுகில் சுமந்து சென்று அந்த மருமகள், அவரை அருகில் உள்ள ராஹா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதன் காரணமாக, மருமகள் நிகாரிகாவுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது, சில உள்ளூர் அதிகாரிகள், மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினர். 

அதே நேரத்தில், கொரேனாவால் பாதிக்கப்பட்ட மருமகள் நிகாரிகாவை மட்டும், வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள். ஆனால், மாமனாரைத் தனியே மருத்துவமனையில் விட மருமகள் நிகாரிகாவுக்கு மனம் வரவில்லை. இதனால், வயதான தனது மாமனாரைத் தானே அருகில் இருந்து பார்த்துக்கொள்வதாக மருத்துவர்களிடம் அவர் கெஞ்சிக் கேட்டு இருக்கிறார்கள்.

இதனால் மனம் இறங்கிய அந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இருவருக்கும் முதற்கட்ட சிகிச்சைகளை அளித்து, அதன் பிறகு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக மாமனார் மற்றும் மருமகள் ஆகிய இருவரையும் அங்குள்ள கொரோனாவுக்கான அரசு சிறப்பு மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில், “தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று, சுயநலமாய் இல்லாமல் பொது நலமாய் யோசித்து வயதான தனது மாமனாரை பொது வெளியில் தனது தோளில் சுமந்து சென்று, மருத்துவமனைக்குச் சுமந்து சென்றதை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்தனர். 

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணைய வாசிகள் பலரும் மருமகள் நிகாரிகாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, இந்தியாவில் சமீப காலமாக கொரோனா பீதியால் கொரோனாவினால் பலியான ஆயிரக்கணக்கான பேரின் உடலை வாங்க ஆளில்லாமல் கர்நாடகாவில் அரசே ஈமச்சடங்கு செய்து எரித்த சம்பவங்கள் ஒரு புறம் இருக்க, கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடலைக் குப்பை கூளம் போல், புல்டோசரில் கொண்டு சென்ற மகன்கள் இருக்கும் இந்த நாட்டில் தான், தனக்கும் கொரோனா தொற்றும் பரவினாலும் பரவாயில்லை என்ற சுயநலமில்லாமல் செயல்பட்ட மருமகள் நிகாரிகாவும் இந்த மண்ணில் சம காலத்தில் வாழவே செய்கிறார்கள். இதனால், மருத்துவர்கள் உட்பட நிகாரிகாவை பலரும் தற்போது வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே, “நீங்க சந்தோஷமா இருபிங்க.. நான் மட்டும் அவஸ்தை படணுமா?” என்று, கேட்டுக்கொண்டு மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த கொரோனா பாதித்த மாமியாரால்” தெலங்கானா மாநிலத்தில் நேற்றைய தினம், பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.