திருமணம் நிகழ்வில், திருமணம் முடிந்த கையோடு மணமகன் தனது மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வட மாநிலத்தில் தான் இப்படி ஒரு ஆச்சரிய நிகழ்வு நடந்திருக்கிறது.

அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் பணிவாக மணப்பெண்ணின் காலை விழுந்து ஆசீர்வாதம் பெறும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

வித்தியாசமான திருமணங்கள் எப்போதும் வைரலாவது உண்டு. அந்த வகையில், சற்று வித்தியாசமாக நடந்த இந்த திருமணமும், இணையத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பண்பாட்டுக் கலாச்சாரத்தின் படி, திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் சேர்ந்து, இருவீட்டார் பெரியவர்கள் முன்னிலையில் மாறி மாறி காலில் விழும் சம்பர்தாயங்கள் நடைமுறையில் உள்ளன.

சில இடங்களில், திருமணம் முடிந்த கையோ, மணப்பெண் தனது கணவனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது மரபாகவும் இருந்து வருகிறது.

ஆனால், தற்போதைய சமூக வெளிகளில் பெண்ணியம் பற்றிய பார்வையும், பெண்கள் சுதந்திரம் பற்றிய அதி தீவிர கருத்துக்களும் பெரிய அளவில் பேசப்படும் ஒரு விசயமாக மாறிப்போனதால், காலத்திற்கு ஏற்ப சில நேரங்களில் இந்த நிகழ்வுகளும் ஆச்சரியமான வகையில் நடப்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

அந்த வகையில், வட மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு, மணமகன் டாக்டர் அஜித் வர்வந்த்கார், எல்லோர் முன்பும் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது, மணப்பெண், தனது கணவனைத் தொட்டு ஆசீர்வதித்ததுடன், “நல்லா இருங்கள்” என்றும், ஆசீர்வதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த இரு வீட்டார் பெற்றோர் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும், அப்படியே ஆச்சரியத்தில் பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றனர்.

குறிப்பாக, மணப்பெண்ணின் காலில் விழுந்து மணமகன் ஆசீர்வாதம் பெற்றதற்கான முக்கியமான சில காரணங்களையும், தனது தரப்பு விளக்கமாக அவர் அளித்து உள்ளார்.

அதில்,

- என் வீட்டிற்குச் செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போகிறவள் என் மனைவி. அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- என் குழந்தையைப் பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தைத் தொட்டுத் திரும்பப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- எனக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போகிறவள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- அவளின் அன்புக்கு உரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் என் மனைவி பயணிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- எனது பரம்பரையைப் புதிதாக உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

- என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

“இப்படி, எனக்காக இத்தனை செய்யப் போகும் என் மனைவிக்கு, நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை” என்று, அந்த மணமகன் மிக அருமையாகத் தன்னிலை விளக்கம் அளித்தார். 

திருமணம் நிகழ்வில், திருமணம் முடிந்த கையோடு மணமகன், தனது மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் தற்பேர்து பெரும் வைரலாகி வருவதுடன், பேசும் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.