சென்னை தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “கடந்த 2014 ஆம் ஆண்டு, சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர், எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போதும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்” அவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார். 

குறிப்பாக, “ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் வழியில், பயிற்சியாளர் கெபிராஜ், காரில் வைத்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், இதற்கு ஒத்துழைக்க நான் மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்” அந்த பெண், புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கெபிராஜை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதன் பிறகு, துணை கமிஷனர் ஜவகர் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில், “அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு வரை த்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் சில காலம் பணி புரிந்ததாகவும், அதன் பிறகு பணியில் இருந்து நின்று விட்டதாகவும்” கூறியிருக்கிறார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 30 ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும், “கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஏன் அந்த இளம் பெண் பாலியல் புகார் அளித்தார்? இதில் யாருடைய தூண்டுதலும் உள்ளதா?” என்கிற கோணத்திலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தற்காப்புக் கலைப் பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 

முக்கியமாக, “பாலியல் புகார் அளித்த பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், எல்லை விட்டு எல்லை சென்று விசாரிக்க சிரமம் இருப்பதாலும், நாமக்கல் மாவட்டத்தில் சம்பவம் நடந்திருப்பதாலும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக” காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதே போல், வேறு பயிற்சி மாணவிகளிடம் கெபிராஜ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா?” என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர், கெபிராஜை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.