நீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல்செய்தார்.

அவர் பேசும்போது, “இந்த சட்டத்தின் மூலம் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளில், தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நடப்பு கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டார். எனினும், இந்த சட்ட மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனிடையே நீட் தேர்வின் முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவர் ராமகிருஷ்ணன் என்பவர் இன்று (அக்டோபர் 13) முறையீடு செய்துள்ளார். அதில், “மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தர ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இம்முறையீடு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டு, மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீட் தேர்வு சம்பந்தமான இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்த நிலையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 15,97,433 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 90 சதவீதம் பேர் நீட் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இருந்த உச்ச நீதிமன்றம், ''தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தேர்வு எழுதியவர்களில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமாகவும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 40 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பை வெளிநாடுகளில் தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். 

நீட் தேர்வு-2020 'கட்-ஆப்' மதிப்பெண் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை, மொத்த காலியிடங்கள், வினாத்தாளின் கடினம், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கட்-ஆப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடும். கடந்தாண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 701-134, எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 133-107 கட்-ஆப் மதிப்பெண்களாக இருந்தன. 

நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம் கூடுதலாக, நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தேர்வு நடந்து இருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.