பெங்களூரு அருகே பாஜக MLA  தள்ளி விட்டதால், பெண் கவுன்சிலரின் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டு குழந்தையின் வளர்ச்சி சரியில்லாததால் கருவை கலைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி பனகட்டி தாலுகாவில் உள்ள மகாலிங்கபுரா நகராட்சிக்கு, கடந்த மாதம் தலைவர், துணை தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பான தேர்தல் நடைபெற்றது. 

அப்போது, பாஜக கவுன்சிலரான சாந்தினி நாயக் என்ற பெண்மணி, “காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மகாலிங்கபுரா நகராட்சியை கைப்பற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க ராபகவி பனகட்டியை சேர்ந்த பாஜக தலைவர்கள் மறுத்து விட்டனர். இதனால், பாஜக தலைவர்களுக்கு எதிராக சாந்தினி நாயக் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இங்கு, அங்கு பரப்பபு ஏற்பட்டது.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த தெரதால் பாஜக எம்.எல்.ஏ. சித்து சவதி என்பவர், பாஜக பெண் கவுன்சிலரான சாந்தினி நாயக்கிடம் தகராறு செய்தார். இதனால், கோபம் அடைந்த பெண் கவுன்சிலரான சாந்தினி, சித்து சவதி எம்.எல்.ஏ.வை நோக்கி வேகமாக சென்றார். அப்போது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில், கடும் ஆத்திரம் அடைந்த சித்து சவதி எம்.எல்.ஏ, பெண் கவுன்சிலரான சாந்தினி நாயக்கை பிடித்து கீழே தள்ளினார்.

இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதன் காரணமாக, “பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது?” என்று சித்து சவதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பலரும் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனை அந்த மாவட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், மகாலிங்கபுராவில் பெண் கவுன்சிலரான சாந்தினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் 3 மாத கர்ப்பமாக இருந்தேன். மகாலிங்கபுரா நகராட்சி தேர்தல் தொடர்பாக நடந்த தகராறின் போது சித்து சவதி எம்.எல்.ஏ. என்னை பிடித்து கீழே தள்ளினார். 

அப்போது, கீழே விழுந்த எனக்கு அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்கேன் எடுத்து பார்த்த போது 'குழந்தையின் வளர்ச்சி சரியில்லை' மருத்துவர்கள் கூறி விட்டனர்” என்று, குறிப்பிட்டார்.
 
“இதன் காரணமாக, எனது கருவை நான் கலைத்து விட்டேன்” என்றும், அவர் பெண் கவுன்சிலர் தெரிவித்து உள்ளார். 

“எனது இந்த நிலைக்கு காரணமான சித்து சவதி எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பெண் கவுன்சிலரான சாந்தினி நாயக் வலியுறுத்தி உள்ளார். அந்த கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலரான சாந்தினிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனால், கர்நாடக மாநில பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதனால், இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை சுமுகமாக முடிப்பதற்கு அந்த மாநில தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த சமாதான பேச்சுவார்த்தையை பெண் கவுன்சிலரான சாந்தினி ஏற்க மாட்டார் என்றும், அக்கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.