திரையுலக மார்க்கண்டேயர் என போற்றப்படுபவர் நடிகர் சிவகுமார். தனது வாழ்வில் உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுபவராகவும், பலருக்கு ரோல்மாடலாகவும் வாழ்ந்து வருகிறார். தனது நிறைவான குணத்தால் பலருக்கு விருப்பமானவராகவும், திரைத்துறையில் பலருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவரது வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கத் துடிப்பவர்களுக்கான எடுத்துக்காட்டு. 

1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். தொடர்ந்து கந்தன் கருணை, துணிவே தோழன் உட்பட பல படங்களில் துணை நடிகராக நடித்தார். பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சிவகுமார் சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி உட்பட பல படங்கள் ஒரு தேர்ந்த நடிகராக அவரது புகழைச் சுமந்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் ஒரு தேர்ந்த ஓவியரும் கூட. தான் வரைந்த ஓவியங்களை வைத்துக் கண்காட்சிகளும் நடத்தியுள்ளார் சிவகுமார். அவரது 24 வயதுக்குள் அவர் வரைந்த பல ஓவியங்கள் பிரபலமானவை. பழைய கோட்டோவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை பலவகையான ஓவியங்களையும் வரைந்திருக்கிறார் சிவகுமார். அவரது ஓவியங்கள் பெயின்டிங்ஸ் ஆஃப் சிவகுமார் எனும் பெயரில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. 

இலக்கியத்திலும் நல்ல வாசிப்பனுபவம் கொண்ட சிவகுமார் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் சிறப்பாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும் அறியப்படுபவர் சிவகுமார். சில மாதங்களுக்கு முன்பு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். 

நடிகர் சிவகுமார் சங்க காலத்திலிருந்த பூக்களின் பெயர்களைக் கடகடவென்று தமது பிரசங்கத்துக்கு நடுவே கூறி எல்லோரையும் பிரமிக்க வைப்பது வழக்கம். 100 மலர்களின் பட்டியலை சிவகுமார் மடை திறந்தாற்போல் கையில் ஒரு சின்னக் குறிப்புக்கூட இல்லாமல் ஒப்பிப்பதைப் பார்த்துப் பலரும் வியந்திருக்கிறார்கள். தனக்கு அறிமுகமான ஒருவரைப் பற்றி இடைவெளி இல்லாமல் கால் மணி நேரத்திற்கும் மேல் பேசும் அளவுக்கு அபூர்வ நினைவாற்றல் கொண்டவர். 

நடிகர் சிவகுமார் தற்போது சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும், அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக், மருமகள் ஜோதிகா, மகள் பிருந்தா(பின்னணி பாடகி) ஆகியோர் திரைத்துறையில் அசத்தி வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா வந்து விட்டதாகவும், இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவியது. 

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தன் வீட்டிலிருந்து ஒரு செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சிவகுமார். மேலும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தினசரி யோகா, நல்ல உணவு முறை என இருக்கும் சிவகுமாரை கொரோனா நெருங்க இயலாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.