“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மதித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும்” என்று, அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று (நவம்பர் 30) கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். 

அந்த கூட்டறிக்கையில், ``இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும்  மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம்  விவசாயப் பெருமக்கள் கடந்த  நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார - மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, நாங்கள் அனைவரும்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“குறைந்தபட்ச ஆதார விலை”என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட  வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிர் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும்  பறிக்க வஞ்சகமாகத்  திட்டமிடப் படுகிறது.

“குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை”; “விவசாய மண்டிகள் இல்லை”;  “இலவச மின்சாரம் இல்லை”என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொண்டுவிட்டது மத்திய அரசு.  ஆனால் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது”என்று நேற்றைய தினம் “மன் கி பாத்”உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான குரல்கள் ஒலித்து வரும் நிலையில், வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டம் குறித்து பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

"ஜனநாயகத்தில் அனைவரும் கேள்வி எழுப்பலாம். ஆனால், புதிதாக ஒரு போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.அரசு எடுத்த முடிவுகள் குறித்து சிலர் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்புகின்றனர். 

இவர்கள் எந்த எல்லை வரை தவறான தகவல்களை பரப்பியுள்ளார்கள் என்பதைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நலத் திட்டங்கள் அமலாவதை அவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். 

இவர்கள்தான் பல 10 ஆண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை எப்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அமல்படுத்தப்படுவது இல்லை. அவர்களுடைய மெகா திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடையவில்லை.

இங்குள்ள கருப்பு அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் தற்போது சந்தை இருக்கிறது. இந்த நாட்டின் விவசாயிகள் ஒருநாள் சுயசார்பு இந்தியாவை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் மோடி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுத் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கே தயாராக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். இதனால், போராட்டம் 4 நான்கு நாள்களைக் கடந்தும் நீடித்து வருகிறது.