கோலிவுட்டில் ஹீரோயின்களை மையப்படுத்தி நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார் வரலக்ஷ்மி. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மக்களின் உள்ளம் கவர்ந்த நாயகியாக திகழும் இவருக்கு, மக்கள் செல்வி என்ற அந்தஸ்த்தை தந்துள்ளது திரையுலகம். 

வரலக்ஷ்மி நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் சேஸிங். இந்த சேஸிங் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை வீரகுமார் இயக்குகிறார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். தசி இசையமைக்கும் இந்த படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

பாலா சரவணன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. நிமிர்ந்து நில் எனும் இப்பாடல் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது. காவல் அதிகாரியாக மிரட்டியுள்ளார் வரலக்ஷ்மி. கல்பனா பாடிய இந்த பாடல் வரிகளை முத்துலிங்கம் எழுதியுள்ளார். காவல் அதிகாரிகளின் பயிற்சி காட்சிகள் கொண்ட இந்த பாடல் வீடியோவை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர் திரை ரசிகர்கள். 

லாக்டவுனின் போது திரையரங்குகள் திறக்கப்படாததால், வரலக்ஷ்மி நடித்த டேனி திரைப்படம் நேரடியாக Zee5 தளத்தில் வெளியானது. இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருந்தார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர். 

சேஸிங் படத்தை தொடர்ந்து கண்ணாமூச்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அவர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.