அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு விடுக்காத காரணத்தால், மத்திய அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், புதியு வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். இதில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். 

போராட்டத்தின் அடுத்த கட்டமாக, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றைத் திரும்ப பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த ஒரு வார காலமாக டிராக்டரிலும், நடந்தும் பேரணியாகப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் விதமாக டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு வருகின்றன. இந்த போராட்டம் இன்று 6 வது நாளாக நீடித்து வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி போலீசார் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று அரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக, அங்குள்ள சிங்கு எல்லை இரு புறமும் இன்று மூடப்பட்டு உள்ளது. இதே போன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டு உள்ளன.

முக்கியமாக, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். 

இது குறித்து டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நம் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் இருக்கின்றன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது. பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை. அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை” என்று, திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால், அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு விடுக்காத நிலையில், மத்திய அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை விவசாயிகள் இன்று ஏற்க மறுக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றன. இதனால், தலைநகர் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.