2020 ஆம் ஆண்டில் அன்பால் மனதை நெகிழ வைத்த மிக அழகான தருணங்கள் பல நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

பரவசத்திற்கு எப்போதும் பரவசப்படும் குணம் நமக்கு இயல்பாக இருப்பதுண்டு. அன்பால், கருணையால், உதவியால் பிறர் மனதைக் குளிர்விக்கும் பாங்கும் நம்மில் பலரும் உண்டு. அப்படி சில நெகிழ்ச்சியான தருணங்கள் இந்த 2020 ஆம் ஆண்டில் அரங்கேறி இருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமாக அனைவராலும் பேசப்பட்டது பாபா கா தாபா நிகழ்வு தான்.

தலைநகர் டெல்லியில் உள்ள மால்வியா நகரில் சாலையோரமாக 80 வயது முதியவரான கந்த பிரசாத், அவரது மனைவி பாதாமி தேவி ஆகியோர் சேர்ந்து உணவுக் கடை ஒன்றை நடத்தி வந்தனர். ஆனால், இந்த தனது கோர முகத்தைக் காட்டி இந்த கொரோனா காலத்தில், அந்த வயது முதிர்ந்த தம்பதிகளின் கடையில் போதிய வியாபாரம் இல்லாமல், அவர்கள் அன்றாட சாப்பாட்டிற்கே நொடிந்துபோனார்கள். இதனால், இன்றைய இளைஞர்களை நம்பிய அந்த வயது முதிர்ந்த தம்பதியினர், கண்ணீர் மல்க அழுது தீர்த்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

இந்த வீடியோ, இணையத்தில் பெரும் வைரலானது. இந்த வீடியோவில் பேசிய அந்த வயது முதிர்ந்தவரின் கண்ணீர் சொட்டும் பேச்சுக்கள் பலரின் மனதையும் கரைத்தது. இதனால், டெல்லி வாசிகள் ஏராளமானோர் அந்த முதியவரின் கடைக்குச் சென்று வயதான தம்பதிக்கு ஆதரவு தெரிவித்து, அங்கு உணவு சாப்பிட்டு, நொடிந்துபோன அவர்களது உணவகத்தைத் தலைநிமிரச் செய்தனர். 

டெல்லி மக்களின் கருணையால், அந்த வயதான தம்பதி நடத்தும் உணவகத்திற்கு நல்ல வருமானமும் கிடைத்தது. இதனால், அந்த வயதான தம்பதிகள், தற்போது அதே பகுதியில் புதிய ரெஸ்டாரண்ட்டையும் புதிதாகத் திறந்து உள்ளனர். இந்த வீடியோவைத் தொடர்ந்து சாலையோர உணவகம் நடத்தி வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏராளமானோரின் வீடியோக்களை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பதிவு செய்து தொடர்ந்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக, டெல்லி தம்பதியினரைப் போன்று கேரள பார்வதி அம்மாள், அசாமின் பக்கோர் வாலி தாதி, ஆக்ராவின் கஞ்சி பதே வலா உள்ளிட்ட வயதான வியாபாரிகளும் தற்போது பயனடைந்திருக்கின்றனர். இதற்கு, பொது மக்களிடையே இருந்த அன்பும், கருணையுமே மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது தான் பேருண்மை.

பார்வையற்றவருக்கு உதவிய பெண்!

இந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கேரளாவில் பார்வையற்றவருக்காகப் பெண் ஒருவர் உதவிய வீடியோ ஒன்று, இணையத்தில் பெரும் வைரலானது. அந்த வீடியோவில், ஓடும் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்திய பெண், அந்த பேருந்தைத் தவறவிட்ட பார்வையற்றவரை அழைத்துச் சென்று, அந்த பேருந்திலேயே ஏற்றி அமர வைத்து, பத்திரமாக அனுப்பி வைத்தார். பார்வையற்றவருக்காக அந்த பெண் சுயநலமற்ற உதவி மற்றும் சேவையானது இணையத்தில் பலராலும் பெரிதும் பகிரப்பட்டது. 

குறிப்பாக, பார்வையற்றவருக்கு உதவி செய்த குறிப்பிட்ட அந்த பெண்ணின் உதவி மனப்பான்மையைப் பாராட்டி “ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம்” அந்த பெண்ணுக்கு ஒரு அழகான வீட்டை அன்பு பரிசாக வழங்கியது. இதுவும், அன்பாலும், கருணையாலும் மனதை நெகிழச் செய்த ஒரு உன்னத நிகழ்வு.

கேரள விமான விபத்தில் ரத்ததானம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம், துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, கோழிக்கோட்டின் 
கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, எதிர்பாராத விபத்தில் அந்த விமானம் சிக்கியது. இதனால், அந்த விமானம் 2 துண்டாக அப்படியே உடைந்துபோனது. அந்த கோர விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இந்த விபத்தில், பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில், குறிப்பிட்ட அந்த மருத்துவமனைகளில் ரத்தம் கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதனால், இன்னும் அதிகப்படியான ரத்தம் தேவை என்றும் செய்தி வெளியானது.

இதனை கேள்விப்பட்ட அந்த மாநில மக்கள் பலரும்,  கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மழை என எதையும் பொருட்படுத்தாமல், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தானாக முன் வந்து ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர். முக்கியமாக, அந்திருந்த அனைவரும் கொரோனா விதிகளை பின்பற்றி அனைவரும் முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி, மருத்துவமனைகளின் முன்பு ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பெரும் வைரலாகி பலரையும் அன்பால் நெகிழச் செய்தது. உதவி செய்ய நேரம் காலம் பார்க்ககூடாது என்பதற்கு, இந்த சம்பவமே மிக முக்கிய சான்றாக அமைந்தது.

மேலும், இங்கிலாந்து நாட்டில் மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணியாற்றும் இனியா என்ற பெண், ஒரு மாதத்துக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுக்கு தன்னுடைய பணம் செலுத்தியதும், அமெரிக்கானவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள நைட்டவுன் ரெஸ்ட்ராண்ட், கொரோனா பரவல் காரணமாகத் தற்காலிகமாகக் கடையை மூடுவதாக அறிவித்த போது, வாடிக்கையாளர் ஒருவர், ஒரே பீர் மட்டுமே வாங்கி விட்டு 3 ஆயிரம் டாலரை டிப்ஸாக கொடுத்து அங்குள்ள ஊழியர்களைப் பிரித்து எடுத்துக்கொண்ட சம்பவம், அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. 

இது போன்ற சம்பவங்களால், இந்த மண்ணுலகில் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.