ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 29-ம் தேதி அவர் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ருத்ரன் என்ற திரைப்படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தது படக்குழு.

எப்போதும் போல நடிகர் லாரன்ஸ் தான் இத்திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ருத்ரன் பட தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இத்திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிக்கும் பிரியா பவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அதர்வாவின் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணின் ஓ மணப்பெண்ணே, சிம்புவுடன் பத்து தல உள்ளிட்ட ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.