2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. அவற்றில் சில முக்கியமான நிகழ்வுகளை மட்டும் தற்போது பார்க்கலாம்..

ஜனவரி 19 ஆம் தேதி, ஹட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச் சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று, விலக்கு அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 4 ஆம் தேதி, தமிழ் நாட்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்க இருந்த பொதுத் தேர்வை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்தது.

பிப்ரவரி 5 ஆம் தேதி, தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றது.

பிப்ரவரி 14 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களையும் பல்வேறு அரசியல் கட்சிகள் முன் வைத்தன.

பிப்ரவரி 15 ஆம் தேதி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தமிழகம் 
முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இந்த சம்பவம் அமைந்து போனது. 

பிப்ரவரி 19 ஆம் தேதி, சி.ஏ.ஏ. சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்ச் 7 ஆம் தேதி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உயிரிழந்தார்.

மார்ச் 11 ஆம் தேதி, தமிழ் மாநில பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.

மார்ச் 16 ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள், மால்கள், நிறுவனங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்தது.

மார்ச் 22 ஆம் தேதி, கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் முழுவதும் நாட்டு மக்கள் அடையாள ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மார்ச் 24 ஆம் தேதி, கொரோனா பரவல் காரணமாக, முதல் முறையாக 21 நாட்கள் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 23 ஆம் தேதி, தொழிற்சாலைகளைக் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படத் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

மே மாதம் 5 ஆம் தேதி, முதன் முறையாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

மே மாதம் 18 ஆம் தேதி, தமிழகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியது.

ஜுன் 9 ஆம் தேதி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து மற்றும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஜுன் 10 ஆம் தேதி, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜுன் 13 ஆம் தேதி, கொரோனா பரவல் காரணமாக, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாகத் தலைமைச் செயலகம் மூடப்பட்டது.

ஜுன் 22 ஆம் தேதி, உடுமை சங்கல் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார்.

ஜுன் 23 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகனான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது லாக்கப் டெத் மரணமாகும்.

ஜுலை 23 ஆம் தேதி, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்தது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் எம்.பி. உயிரிழந்தார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி, பிரதமரின் கிஸான் நிதி உதவித் திட்டத்தால் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செப்டம்பர் 12 ஆம் தேதி, நீட் தேர்வு பீதியால் 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அக்டோபர் 1 ஆம் தேதி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்தது.

அக்டோபர் 7 ஆம் தேதி, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நிவர் புயல் காற்றால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால், சென்னை மக்கள் பீதியடைந்தனர்.

டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழகத்தின் 38 வது  மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது.

டிசம்பர் 29 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்த், தனது உடல் நிலையைக் காரணமாகக் கூறி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தனது முடிவை கை விடுவதாக அறிவித்தார்.

டிசம்பர் 30 ஆம் தேதி, ரஜினியின் அரசியல் பின்வாங்கலால், “இறப்பு என்னைத் தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.

டிசம்பர் 31 ஆம் தேதி, வழிபாட்டுத் தலங்களில் இருந்த நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.