2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் புகார்களில் 62 விழுக்காடு நிதி மோசடிகளுடன் தொடர்புடையவை என்று டெல்லி காவல் துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டது. இதனால், அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும், அலுவலகங்களும் மூடப்பட்டு, பலரும் வேலை இழந்து தவித்து வந்தனர். இதனால், அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும்பாலும் மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் அன்றாடம் அரங்கேற்றப்பட்டு வந்த சைபர் கிரைம் குற்றங்களும், புதிதாக உருமாற்றம் அடைந்து அவை அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறி, பொது மக்களிடம் பணம் பறிக்கும் டிஜிட்டல் சைபர் கிரைம் குற்றங்களாக மாற்றம் பெற்றன.

அதன் படி, இந்த 2020 ஆம் அண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் புகார்களில் சுமார் 62 சதவீத புகார்கள் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவை என்று, டெல்லி காவல் துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி காவல் துறை அறிக்கை ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, அனைத்து விதமான வர்த்தகங்களும், வங்கி பரிமாற்றங்களும் முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெற்றதால், சைபர் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்து போய் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இந்த 2020 ஆம் ஆண்டில் சைபர் கிரைம் புகார்களில், சுமார் 62 விழுக்காடு நிதி மோசடி புகார்களாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், வெறும் 24 சதவீதம் மட்டுமே ஆன்லைன் துன்புறுத்தல்கள் என்றும், மீதமுள்ள 14 சதவீத புகார்கள் ஹேக்கிங், தரவு திருட்டு தொடர்பான குற்றங்களாகப் பதிவாகி உள்ளதாகவும்” டெல்லி காவல் துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

முக்கியமாக, “இந்தப் புகார்களில் 24 சதவீதம் சமூக வலைத்தளங்களின் வழியாக நடந்துள்ளன என்றும், இவற்றில் பாலியல் தொந்தரவு தொடர்பான குற்றங்களும் இந்த முறை முன்பைவிட தற்போது மேலும் அதிகரித்துள்ளன” என்றும், டெல்லி காவல் துறை கவலையோடு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் தொடர்பாக, வெறும் சைபர் குற்றங்களில் தொடர்புடையதாக 214 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், டெல்லி காவல் துறை கூறியுள்ளது.

அதே போல், தனிப்பட்ட ஒரே ஒரு நபர் மட்டும் 26 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிக முக்கியமாக, இந்தியாவில் கொரோனா பொது முடக்கக் காலத்தில் 500 சதவீதம் அளவில் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறிய அவர், “இணையக் கட்டணத் தளங்களில் பணத்தைக் கையாளுதல் தொடர்பாக அதிக அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இணையத்தில் இருக்கும்போது பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், இணையத்தைப் பயன்படுத்தும் போது ஒரு பொறுப்பான அணுகுமுறை இருக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தினார். 

மேலும், சென்னையில் கடந்த சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கிரைம் சார்ந்த குற்றங்கள், ஆன்லைன் சார்ந்த இணையவழி குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி கிரைம் சார்ந்த குற்றத்தால் பாதிக்கப்படும் பொது மக்கள் தேவையிலாம் அலையாமல் இருக்கும் வகையிலும், சைபர் மோசடி குற்றத்தால் இழந்த பணத்தை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொது மக்கள், சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தால் விரைவில் மீட்டுத் தருவதற்கு வாய்ப்பு உள்ளதாலும், பொது மக்களுக்காக காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், 12 சைபர் கிரைம் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. இப்படியா, இந்த 12 சைபர் கிரைம் பிரிவும் தொடங்கப்பட்டு தற்போது 5 மாதங்கள் ஆகின்றன. இதில், முதல் 2 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையங்களில் ஆன்லைன் மோசடி, ஓ.டி.பி. மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள் போன்ற பல்வேறு விதமான சைபர் குற்றங்கள் தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகளும், மேற்கில் 138 வழக்குகள் என்று மொத்தம் 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக, “இது போன்ற சைபர் கிரைம் வழக்குகளில் முதல் 2 மாதம் வரையிலான நிலவரப்படி 57 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், பொது மக்கள் இழந்த தொகையான 22 லட்சத்து 81 ஆயிரத்து 632 ரூபாய் உடனுக்குடன் மீட்டுக் கொடுத்துள்ளதாகவும்” தமிழக காவல் துறை தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது, 

அத்துடன், “பொதுமக்கள் தங்களது ஏ.டி.எம். கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், அப்படிப் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும்” சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

அதே நேரத்தில், “சைபர் கிரைம் குற்றத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், என்தந்த பகுதிகளில் இது போன்ற குற்றங்கள் அதிகமாகக் காணப்படுகிறது என்பதையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதே போல், தமிழகத்தைச் சேர்ந்த விவேக் என்பவர், ஆன்லைன் மூலமாக 4000 கடன் வாங்கியதால், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கொடுத்த கடும் டார்ச்சரால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

இதனையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பொது மக்கள் கடன் வாங்கக்கூடாது” என்று, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக, “கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாதவை என்றும், பொது மக்களுக்கு எச்சரிக்கை” விடுத்து உள்ளது.