டோங்கா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் அதிர்வு சென்னை, புதுச்சேரி, காரைக்காலிலும் பதிவானது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IMD CHENNAI

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு மக்கள் அந்த தீவில் வசித்து வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய தீவுகளாக அந்த நாடு அமைந்துள்ளது.  பசிபிக் பெருங்கடல் என்றாலே தீவுப் பகுதிகளிலும் கடலுக்கு அடியிலும் நிலப்பரப்புகளில் ஏராளமான எரிமலைகள் அமைந்திருப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருக்கும் அவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பி பாதிப்புகளை ஏற்படுத்தலாம். டோங்கா நாட்டிலும் ஏராளமான எரிமலைகள் கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி கூங்கோ டோங்கா என்ற தீவின் அருகே கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த எரிமலை கடும் சீற்றத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. கடலுக்குள் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவில் 20 கிலோ மீட்டர் உயர அளவுக்கு எரிமலை வெடித்து சிதறிய சாட்டிலைட் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

அதாவது பசிபிக் தீவு நாடான டோங்காவில் உள்ள கடலுக்கு அடியில் இருந்த ஹங்கா டோங்கா ஹங்கா ஹாபாய் எரிமலை நேற்று முன்தினம் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அங்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரை பகுதிகளை கடந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் நேற்று முன்தினம் பரபரப்பானது.

இந்நிலையில் இந்த எரிமலை வெடிப்பின் அழுத்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் டோங்கா தீவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் கூட இதன் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது, வானிலை ஆய்வாளர்கள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டோங்கா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு அதிர்வு பதிவானதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் குறிப்பாக தமிழகத்திலும் இதன் அதிர்வு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சரியாக இரவு 8.15 மணியளவில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் உள்ள பாராமனி மீட்டரில் 1.5 ஹெக்டோ பாஸ்கல் என்ற அளவில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மட்டுமல்லாது, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதன் அதிர்வு பதிவாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத்தொடர்ந்து இந்த அதிர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பால் கடலோர பகுதிகளை ஒட்டிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து பாராமனி மீட்டரிலும் இந்த அதிர்வு பதிவாகியது என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு, திருவனந்தபுரத்திலும் எரிமலை வெடிப்பின் அதிர்வலைகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.